""நாங்கள் முகாம்களில் நிம்மதியாக இல்லை. எங்களைத் தொப்புள் கொடி உறவுகள் என்று சொல்லிக் கொள்ளும் சொந்தங்கள் அரவணைக்கத் தவறி விட்டன. வேஷங்களும், வேடதாரிகளும் நிறைந்து கிடக்கும் இங்கே எங்களுக்கு வாழப் பிடிக்கவில்லை. எங்கள் சொந்த மண்ணிலிருந்தும் நாங்கள் துரத்தி அடிக்கப்பட்டிருக்கிறோம். ஆதரவற்று நிற்கிற எங்களை ஒன்று ஆதரியுங்கள். இல்லை, கை விட்டு விடுங்கள். எங்களை வைத்து அரசியல் செய்யாதீர்கள். அது கேவலம். முள்ளிவாய்க்கால் இறுதிப் போரின் போது காயங்களோடு தப்பித்து இங்கே இடம் பெயர்ந்து வந்து சேர்ந்த ஓர் அகதியின் கண்ணீர் வார்த்தைகள் இவை. சொல்லப் போனால் இதுதான் கதையும். இத்தனை நாள் வாழ்ந்ததற்கு அடையாளமாய் இந்தப் படம் எடுத்திருக்கிறேன். இது கர்வம் அல்ல. பெருமை'' என்று சிலாகித்துப் பேசுகிறார் இயக்குநர்
சத்யசிவா. "கழுகு' படத்தின் மூலம் கவனிக்கத்தக்க கதை சொன்னவர். இப்போது அகதிகளின் வாழ்க்கைப்
பின்னணியில் உள்ள அரசியலை "சிவப்பு' படத்தின் மூலம் பேச வருகிறார்.
தலைப்பு கொடுக்கிற வித்தியாசமே நிறைய இருக்கு....?
வன்முறை, காதல், கோபம், தோழமை என எழுகிற மனிதகுல வெளிப்பாடுகளுக்கு சிவப்பு என்பது உலகம் ஏற்றுக் கொண்ட அடையாளம். இந்தக் கதை ஒரு தனி மனித கோபத்தைப் பற்றியது. அதன் குறியீடுதான் இந்தச் சிவப்பு. நிராகரிக்கப்பட்ட ஒரு புன்னகைதான் இந்த உலகுக்கு முதல் போரை முன் தூக்கி வந்திருக்கும். இயற்கையின் பெருவெளிக்கு முன், நான் அற்பமானவன் இல்லை. புள்ளிக்கும் புள்ளியாய் என் இருப்பைச் சுருக்க முடியாது என்கிற ஒரு தனிமனிதனுக்கு உண்டான அடக்குமுறையின் மீதான கோபம் ஒவ்வொரு முறையும் போரை முன் எடுத்து வந்திருக்கும். அப்படி தமிழ் இனத்தின் மீது தொடுக்கப்பட்ட வன்முறை எத்தனை எத்தனை பேரை அநாதைகளாக்கி அகதிகளாக்கியிருக்கிறது. ஈழப் போரில் இருந்து தப்பித்து வந்தவர்கள், இங்கே பாண்டிச்சேரி பக்கம் வந்து அடைக்கலம் தேடுகிறார்கள். உரிமைகள் மறுக்கப்பட, உறவுகள் கைக் கொடுக்காத நிலையில், தஞ்சம் அடைய ஆஸ்திரேலியாதான் உகந்த நாடு என எண்ணுபவர்களை இங்கே உள்ள மீடியேட்டர்கள் ஏமாற்றுகிறார்கள். அதன் பின் அவர்களுக்குக் கிடைக்கும் அரவணைப்பு, பூவாக மலர்ந்து நிற்கிற ஒரு காதல். அதற்குள் விரிந்திருக்கும் அரசியல் இவையெல்லாம் சேர்ந்து பயணமாகும் போது, தமக்கு நேர்ந்த சூழல்களை எப்படிக் கடந்து போகிறார்கள் என்பதுதான் கதை. அந்த பெரும் போராட்டத்திற்கு துணையாக ராஜ்கிரண் வலு சேர்த்திருக்கிறார். பெரும்பான்மையான மக்களுக்கு தெரிந்த கலைஞன்தான் இதில் நடிக்க முடியும்.
ஈழப் போர்... அகதிகள் முகாம்... அரவணைப்பு... காதல் இதுவெல்லாம் தமிழ் சினிமா பார்த்து வந்த சங்கதிகள்தான்... இது எப்படி வித்தியாசப்படும்....?
விசேஷமான திரைக்கதைதான். அகதி வாழ்க்கை என்பது தினம் தினம் மரணத்தைச் சந்தித்துத் திரும்புகிற மாதிரியான வலி. அதை வார்த்தைகளால் சொல்ல முடியாது. ஆனால் அது இங்கே வியாபாரமாக மாறுகிற போது இதயம் கனக்கிறது. தமிழ் இளைஞனாக அதன் மீது எனக்கு இருந்த கோபம், அதன் பாதிப்புதான் இந்தப் படம். அரசியல்வாதி ஒருவரின் மேடைப் பேச்சோ.... பத்திரிகை
பேட்டியோ... சூடான விவாதங்களோ... எதுவாக இருந்தாலும் அதில் பத்து வார்த்தைகள் ஈழத் தமிழர்களைப் பற்றியதாக இருக்கிறது. அவர்கள் படும் பாட்டிற்கு அந்த கட்சிதான் காரணம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால்.... என்றெல்லாம் பேச்சு இருக்கும். அது உண்மையா? இல்லையா? என்பதற்கு இல்லை என்பதுதான் பரவலான பதிலாக இருக்கும். அந்தப் புள்ளிதான் இந்த கதை. இன்றைய ஈழத் தமிழர்களுக்கு என்ன தேவை என்பதை புரிந்து, உணர்ந்து அதை திரைக்கதை ஆக்கியிருக்கிறேன். தமிழர்களின் இந்த தலைமுறை ரொம்பவே மாறி வந்திருக்கிறது. எங்கே தவறுகள் நடக்கின்றன என்பது அவர்களுக்கு தெளிவாக தெரிகிறது. ஆனால் அதை சொல்வதற்கும், கீழே இறங்கி வேலை பார்ப்பதற்கும் அவர்களுக்கு நேரம் இல்லை. எல்லாம் இருக்கிற மனிதனுக்கு எதைப் பற்றியும் கவலை இல்லை. ""பொழைக்க போன இடத்துல அவங்களுக்கு ஏன் இந்த வேண்டாத வேலை''ன்னு ஈழத் தமிழர்கள் பற்றி பேசுபவர்களையும் நான் பார்த்திருக்கிறேன். அதனால் சில உண்மைகளை உரக்கப் பேச வேண்டும் எனத் தோன்றியது. அதனால்தான் இது விசேஷமான கதை.
எல்லாருக்குள்ளும் இருக்கிற வருத்தம்தான் கதை பின்னணி.... இதில் போய் காதல்...?
சரியாக வருமா...?
சில உண்மைகளைப் பேசுவதற்கு இயல்பான கதை மட்டுமே போதாது. அதை இன்னும் நேர்த்தியாக்க கற்பனைகள் வேண்டும். அந்த இடத்தில்தான் காதல் வந்து போகிறது. ஓர் அகதி பெண்ணுக்கும், இங்கே உள்ள பையனுக்கும் காதல். ஆனால் அதை வேறு இடத்தில் இடம் மாற்றி வைத்திருக்கிறேன். வலுவான காதல் என்று சொல்லலாம். ரூபா மஞ்சரியும், நவீன் சந்திராவும் கட்டிட வேலைகளை விட்டு விட்டு கடற்கரைக்கு வந்திருப்பார்கள். நவீன் கடற்கரைக்குள் இறங்கி ஓடி, காதலி ரூபா மஞ்சரியையும் உள்ளுக்குள் இழுப்பார். கடல் நீரில் கால் வைக்கும் போது கூட ரூபாவுக்கு போர் நினைவுகள்தான் வந்து போகும். அங்கே ஒரு ரசனையான காதல் அருமையான உணர்வுகளால் நிரப்பபடும். இதே போல் ஈழத் தமிழர்களுக்காக உயிரை நீத்த ஒருவருக்கு பெரிய ஊர்வலம் போகும். அதைப் பார்த்து நவீனிடம் "ஏன்? எதற்கு?' என்பார் ரூபா. "உங்களுக்காகத்தான்' என்பார் நவீன். ""நீங்க இருக்கிற தைரியத்துலதான் நாங்க இருக்கோம்...'' ""நீங்க இப்படி செய்தால் எப்படி'' என்பாள். அந்த இடத்தில் இன்னும் புனிதமாகி நிற்கும் அந்த காதல்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.